திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் நாளை பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நாளை பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. அதையொட்டி, மாடவீதிகளில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ம் நாளான நாளை(சனி) பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. அதையொட்டி, மகா ரதம் வலம் வரும் மாடவீதிகளில் முன்னேற்பாடு பணிகள், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காந்தி சிலை அருகே தொடங்கி மாடவீதிகள் முழுவதும் அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு செய்தனர். தேரோட்டத்தின்போது, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும், போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்கவும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர். பின்னர், பஞ்சரதங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.  அதைத்தொடர்ந்து, கடலக்கடை சந்திப்பு, திருவூடல் தெரு, பேகோபுர தெரு, பெரிய தெரு பகுதிகளில் ஆய்வு செய்து, காந்தி சிலை அருகே ஆய்வு பணியை நிறைவு செய்தனர்.

மேலும், மாடவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்பனை செய்த வடநாட்டை சேர்ந்தவர்களிடம், அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

ஆய்வின்போது, டிஆர்ஓ ரத்தினசாமி, ஏடிஎஸ்பி அசோக்குமார், கோயில் இணை ஆணையர் ஞானசேகர், வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார், ஆர்டிஓ தேவி, உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆனந்த்குமார், நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: