உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்; உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் நோக்கத்தோடு வழக்கு தொடரவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை முறையாக இல்லை என்பதை மடடுமே நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும், புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதா என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தப்பட்டால் குளறுபடி ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை விரைவில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறைகளை முறையாக பின்பற்றவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதே சமயம்,  விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணிக்கே வெற்றி

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்தார். தோல்வி பயத்தால் அதிமுக அரசு தேர்தலை நடத்த தயங்குவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். வரும் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>