கடந்த 10 ஆண்டுகளில் பணியின்போது 1,113 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை..: மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பணியின்போது 1,113 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் பல்வேறு காரியங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், கேள்வி நேரங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, அந்தந்த துறை அமைச்சர்கள் சார்பில் பதிலும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், மக்களவையில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 1,113 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 891 ராணுவ வீரர்கள், 182 விமானப்படை வீரர்கள் மற்றும் 40 கடற்படை வீரர்கள் ஆவர் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், சக வீரர்களால் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 28 பேர் ராணுவ வீரர்கள் என்றும், 2 பேர் விமானப்படை வீரர்கள் எனவும் கூறியுள்ளார். தனிப்பட்ட பிரச்னை, மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன அழுத்தம், நிதிப் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக பாதுகாப்புத்துறையின் மனநல ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2006ம் ஆண்டில், பாதுகாப்புத்துறையின் மனநல ஆய்வு மையம் நிறுவப்பட்டது. இந்த மையம், பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தொடர்ந்து மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: