வெங்காயம் விலை உயர்வு எதிரொலி: உணவகங்களில் ஆனியன் தோசை ஆம்லெட் விலையும் கிடு...கிடு...

வேலூர்: வெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக உணவங்களில் ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம், ஆம்லெட் உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வேலூர், திருவண்ணாமலை, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற அன்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை ரூ.3700 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை உயர்வு எதிரொலியாக உணவகங்களில் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. வேலூரில் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம், தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆம்லெட் விலையும் ரூ.10ல் இருந்து ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் இல்லாத ஆம்லெட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவகங்களில் சாப்பிடுபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வியாபாரம் குறைந்துள்ளதால் உணவக உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வெங்காயம் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெங்காயம் விலையை குறைக்கவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: