ஐயா... ஆதாரை மாத்திக்குடுங்க இல்லாட்டி என் மேல ஏத்துங்க... பெயர் மாற்றத்துக்காக ராஜ்நாத் கார் முன் பாய்ந்த நபர்

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரின் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென வந்து படுத்த நபர், ‘‘ஆதார் கார்டில் என் பெயரை மாற்றித்தாருங்கள். இல்லாவிட்டால் என் மீது ஏற்றிவிட்டு செல்லுங்கள்,’’ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால், நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலை, பரபரப்பாக இருக்கும். காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இந்நிலையில், நேற்று மதியம் 1.25 மணி அளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது, திடீரென ஒரு நபர் சாலையில் வந்து படுத்துக் கொண்டார். அதைப் பார்த்த காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரை அப்புறப்படுத்தினர்.

அப்போது, அந்த நபர், ‘‘ஆதார் கார்டுல என் பெயரை மாத்திக் குடுங்க... இல்லாட்டி என் மேல ஏத்திட்டு போங்க...’’ என்று கத்தினார். அமைச்சரின் கார் சென்றபிறகு, அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரைச் சேர்ந்த விஷாம்பர் தாஸ் குப்தா (35) என்று தெரியவந்தது. காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அவர் தெரிவித்த அடுத்த கோரிக்கை போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த நபர் போலீசாரிடம், ‘‘எக்ஸ்கியூஸ் மீ... ஆதார்ல பெயரை மாத்தணும். அதுக்காக நான் பிரதமரை நேரில் சந்திக்கணும். எப்போ ஏற்பாடு பண்ணப்போறீங்க?...’’ என்று கேட்டு திகைக்க வைத்தார். அதன் பின்னர்தான் அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவலர்கள் கண்டுபிடித்தனர். அவரது குடும்பத்தினருக்கு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: