உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவசர அவசரமாக 260 பேருக்கு ஆடு வழங்கிய கால்நடை துறை

அருப்புக்கோட்டை: உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் 260 பயனாளிகளுக்கு அவசர அவசரமாக தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. கிராமப்புற வறுமைக்கோட்டிற்கு கீழ்  உள்ள ஏழை மக்கள் வருமானம் ஈட்டும் வகையில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 3 ஆடு, 1 கிடாய் வழங்கப்படும். இதற்காக ஆடுகளுக்கு  பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால் பத்தாயிரம் ரூபாய்க்கு 4  ஆடுகள் வாங்க இயலாததால் பயனாளிகள் கூடுதலாக தங்களது சொந்த பணம் ஐந்தாயிரம் ரூபாய்  வரை செலவழிக்க வேண்டியுள்ளது.

இவற்றை ஒரு சிலர் கடன் வாங்கி வாங்குகின்றனர். உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டை  அருகே பந்தல்குடி, பெரியவள்ளிக்குளம், பள்ளிமடம், கோவில் வீரார்பட்டி, நரிக்குடி ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த 260 பயனாளிகளுக்கு அருப்புக்கோட்டை நகராட்சி எதிர்புறம் உள்ள ஆட்டுச்சந்தையில் கால்நடைத்துறையினர் அவசரம் அவசரமாக ஆடு வழங்கினர்.

இந்த ஆடுகள் நோயுற்றதா, நல்ல நிலையில் உள்ளதா என்று பார்க்காமல் பயனாளிகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக வழங்கினர். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பயனாளிகளுக்கு இலவசமாக ஆடு  வழங்கியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: