மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்தது போலீஸ்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(66) என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி 80 அடி நீளம், 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இருந்தது. இந்த சுவர் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த காம்பவுண்ட் சுவருக்கு அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் இருந்தன. அந்த வீடுகளில் 4 ஓட்டு வீடுகள், ஒரு வீடு சிமென்ட் ஷீட் கூரையுடன் கட்டப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகளின் மீது விழுந்தது. தகவலறிந்ததும் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக போராடி, வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் தலைமறைவானார்.

இதனால், சிவசுப்பிரமணியத்தின் இரு மகன்களையும் காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமுகை பகுதியில் பதுங்கியிருந்த சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்றவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: