மேகமலை வனப்பகுதியில் காட்டுயானைகள் களேபரம்

வருசநாடு: மேகமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேகமலையில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், சாலைகளில் வாகனங்கள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பெய்யும் மழை மற்றும் கொசு தொல்லையால் காட்டு யானைகள் மேகமலை வனப்பகுதிக்கு வருவது வாடிக்கை. இந்த ஆண்டும் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதனால் யானைகள் சாலைகளில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இவற்றை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: