ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி

ராஜபாளையம்: ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடந்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கலப்படமில்லா நாட்டு இன நாய்கள் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடையே அதிகரிக்கும் வகையில் கோவையை சேர்ந்த நேச்சர் டாக் பிரீட் ஸ்பெசாலிட்டி கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழகம், கேரள மாநிலத்திலிருந்து கோம்பை, கன்னி, சிப்பிபாறை, ராஜபாளையம், கேரவன்ஹவுண்ட் உள்ளிட்ட 8 வகையான 178 நாட்டு இன நாய்கள் பங்கேற்றன. நாயின் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, வேகம் உள்ளிட்டவைகளை டெல்லியிருந்து வந்திருந்த நடுவர் ஷரத் ஷர்மா பரிசோதனை செய்தார்.

பின் ஒவ்வொரு இனத்திலும் ஆண், பெண் என 16 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 16 நாய்களில் சிறப்பாக செயல்பட்ட 8 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. வெளிநாட்டு நாய்கள் வளர்க்கும் மக்களின் கவனத்தை திசை திருப்பி,  நாட்டு இன நாய்களை வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாக அமைப்பின் தலைவர் டாக்டர் ரவி தெரிவித்தார்.

Related Stories: