மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தாமிரபரணி ஆற்றில் 2வது நாளாக வெள்ளம்

நெல்லை : மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நேற்று 2வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணை மறுகால் பாய்கிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் வெளுத்து வாங்குகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் டிசம்பர் மாதம் நிரம்பும் பாபநாசம், சேர்வலாறு அணைகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே நிரம்பி வழிந்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குறைந்த போதிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.05 அடியாக உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 144.68 அடியாக உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1982 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 2 ஆயிரத்து 560 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையில் 21 மிமீ, சேர்வலாறு அணையில் 24 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நேற்று 2வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவற்றை ெவள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீ வைகுண்டம் அணை மறுகால் பாய்கிறது. ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என வருவாய் துறை, போலீசார்,  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வருவாய் துறையினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 986 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைப்பகுதியில் 5.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணையில் 5 மிமீ, ராமநதி அணையில் 15 மிமீ, கருப்பாநதி அணையில் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 2.4 மிமீ, சேரன்மகாதேவியில் 1.2 மிமீ, நாங்குநேரியில் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நீர் திறப்பு அதிகரிப்பு

நெல்லையில் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதேபோல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 540 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து நீர் திறப்பு 4 ஆயிரத்து 120 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடிவரும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொங்கும் நுரை

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளதால் அதிக தண்ணீர் மலைப்பகுதிகள் வழியாக வருகிறது. எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு நடுவே தண்ணீர் ஓடி வரும் காட்சி வெள்ளியை உருக்கியது போன்று நுரையாக பொங்கி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.

Related Stories: