உள்ளாட்சி அமைப்புகளில் 1.31 லட்சம் பதவிகளுக்கு நேர்முக தேர்தல்: மேயர் உள்ளிட்ட 1083 பேர் மறைமுகமாக தேர்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில்,உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தநிலையில்,உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் அனைத்தையும் முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த பதவியிடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக ஒசூர், நாகர்கோவில், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டதால் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியிடங்கள் அதிகரித்துள்ளன. அதேநேரம், நகராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நகர்மன்ற உறுப்பினர் பதவியிடங்கள் குறைந்துள்ளன. அதன்படி 15 மாநகராட்சி, 121 நகராட்சி, 528 பேரூராட்சி உறுப்பினர், 12,524 கிராம ஊராட்சி தலைவர், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 1.31 லட்சம் பதவிகளுக்கு நேர்முகத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட 1083 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories: