கீழடி அகழாய்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: பல்கலை.துணைவேந்தர் பேட்டி

மதுரை: கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கீழடி அடுத்தகட்ட ஆய்வை தொடங்கும் தருணம் நெருங்கி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக சென்னையில் மூத்த பேராசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரை சந்தித்து கீழடி 6ம் கட்ட ஆய்வை உடனடியாக தொடங்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு மற்றும் மதுரை பல்கலைக்கழகம் இடையே ஒருமாத காலத்திற்குள்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மதுரை பல்கலைக் கழகத்திற்கு நிதி அளித்து வரும் ரூசா அமைப்பு மூலமாக கீழடி ஆராய்ச்சிக்காக சுமார் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். வெகு விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், முதற்கட்ட ஆராய்ச்சியின் மாதிரியை அமெரிக்க ஹார்வர்டு பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related Stories: