பாபநாசம் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு: அகஸ்தியர் அருவியில் குளிக்கத்தடை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முக்கிய அணைகளான காரையார், பாபநாசம் அணைகள் நிரம்பியதால், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் தொடர் மழையால், 143 அடிகொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை கடந்த செவ்வாய்கிழமை அதன் முழு கொள்ளவை எட்டியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1754 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, ஆற்றின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவியில் குளிக்கத்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றத்தினால் பாதுகாப்பு கருதி அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி யாரும் அருவிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் சார்பில் அருவிப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: