நாகர்கோவில் மாநகர் முழுவதும் குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்: சாலைகளில் ஆறாக ஓடும் அவலம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் குழாய்கள் உடைந்து, ஆங்காங்கே குடிநீர் வீணாக செல்வது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. நாகர்கோவில் மாநகருக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்புக்கு பிறகு, வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை கடந்த கோடையில் வறண்டது. இதனால் நாகர்கோவில் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதே அபூர்வமாக இருந்தது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், மாநகராட்சி ஆணையரும் மாறி, மாறி வேண்டுகோள் விடுத்தனர்.  தற்போது பெய்த மழை காரணமாக முக்கடல் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால், இன்னும் ஒரு வருட காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும், அதற்குள் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. டெரிக் சந்திப்பு, கோட்டார், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாைலகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்ற வண்ணம் உள்ளது. இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

குடிநீர் தட்டுப்பாடு சமயத்தில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. பலமுறை போனில் தகவல் தெரிவித்தாலும் கூட, அதிகாிகள் சிலர் அலட்சியமாக பதில் தருவதாக, பொதுமக்கள் கூறுகின்றனர். அடுத்த தலைமுறை சந்திக்கும் முக்கிய பிரச்னையாக குடிநீர் தட்டுப்பாடு இருக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்னர். குடிநீர் பாதுகாப்பு எ்னபது மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசுகையில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. அவர் தான் பணியாளர்களை நியமித்து உடைப்பை சரி செய்து வருகிறார் என்றனர். போதிய பணியாளர்களை ஒதுக்காமல், குறைந்த அளவு பணியாளர்களை வைத்து இந்த வேலைகளை செய்வதால், குழாய் உடைப்பை சரி செய்ய தாமதம் ஆகிறது என கூறப்படுகிறது. கட்டிட இடிப்புகளில் காட்டும் ஆர்வத்தை, குழாய் உடைப்ைப சரி செய்வதிலும் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: