மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் எதிர்த்து வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு

மதுரை: மேயர் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அரசாணையை எதிர்த்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஐகோர்ட் கிளை தள்ளி வைத்தது. மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஸ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சுயநலத்துடன் மறைமுகத்தேர்தலை அறிவித்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வந்ததில், உள்நோக்கம் உள்ளது. இந்த தேர்தல் முறையால் குதிரை பேரம் நடக்கும். கவுன்சிலர்கள் கூடி மேயர் மற்றும் தலைவரை தேர்வு செய்யும்போது, மக்களுடன் நேரடித் தொடர்பில்லாமல் போய்விடும். மறைமுகத் தேர்தல் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு விரோதமானதாக இருந்தால் அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. எனவே, அரசு அவசர சட்டம் செல்லாது என்றும், தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நவ. 18ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடத்துவது தொடர்பான நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து டிச. 13க்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதன்படி, தேர்தல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பானது. அதற்கும், அவசர சட்டத்திற்கும் தொடர்பில்லை’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: