பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், சிட்கோ 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஸ்டீல் கம்பெனி, பர்னிச்சர் கடை மற்றும் திருமணங்களுக்கு தேவையான பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு விடும் கடை உள்ளன. 2வது மாடியில் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இங்கு, பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த விக்னேஷ், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு துறை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் ஏழுமலை தலைமையில் வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மணலி, மாதவரம், வேப்பேரி, எழும்பூர் பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
4வது மண்டல பகுதி பொறியாளர் ஏழுமலை, சம்பவ இடத்துக்கு வந்து மெட்ரோ வாட்டர் தண்ணீரை வரவழைத்தார். 20 வண்டிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், தீ கட்டுக்குள் வராததால், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, குடோனின் சுவர் இடிக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் உள்ளே இருந்த பர்னிச்சர்கள், பிளாஸ்டிக் குழாய்கள், சமையல் பாத்திரங்கள், ஸ்டீல் பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர், எம்கேபி நகர் உதவி கமிஷனர் அழகேசன் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.