திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி அதிகார நந்தி வாகனம் சீரமைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளி அதிகார நந்தி வாகன பீடம் சீரமைக்கும் பணி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இதையொட்டி, தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் நாட்களில், சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பழுது நீக்கி சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, தீபத்திருவிழாவின் முதல் நாளான்று இரவு உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து அருள்பாலிக்கும் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தின் உறுதித்தன்மை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வெள்ளி அதிகார நந்தி வாகனத்தை தாங்கி நிற்கும் மரத்தினால் செய்யப்பட்ட பீடம் உறுதியற்று, சிதைவுற்று இருந்தது தெரியவந்தது.

எனவே, பீடத்தை சீரமைக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதைந்த பீடத்தை மாற்றிவிட்டு புதிதாக பீடம் அமைக்கும் பணி நடந்தது. அதையொட்டி, கோயில் முதலாம் பிரகாரத்தில், பெரிய நந்தி அருகே ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, வெள்ளி அதிகார நந்தியை பீடத்தில் இருந்து பாதுகாப்பாக தனியே எடுத்தனர். பின்னர், பழைய பீடத்தை அகற்றி விட்டு, புதிய பீடத்தை பொருத்தினர். தொடர்ந்து வெள்ளி அதிகார நந்தி வாகனத்தை பீடத்தின் மீது பொருத்தினர். அதன் தொடர்ச்சியாக, உற்சவத்தின் போது வீதியுலா செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, பழுதுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

Related Stories: