திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினம் மற்றும் குபேர கிரிவலத்தையொட்டி நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமாலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், நேற்று குபேர கிரிவலம் என்பதால், குபேர கிரிவலம் செல்ல வந்திருந்த பக்தர்கள் முன்னதாக அண்ணாமலையாரை தரிசிக்க வந்ததால், நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் செல்லும் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரித்ததால் நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த வயதானவர்களும், சிறுவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூட கோயில் நிர்வாகம் சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் கூட அமைக்கப்படவில்லை. குபேர கிரிவலம் மாலையில் என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் முதலில் அண்ணாமலையாரை தரிசிக்க வந்திருந்தாலும், விடுமுறை தினம் என்பதாலும் நேற்று பக்தர்கள் கூட்டம் கிளிகோபுரம் வரை காத்திருந்தனர். தரிசன கட்டணம் உயர்வு: அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாட்களில் கட்டண தரிசனம் ரூ.50 வசூலிக்கப்படும். மற்ற வழக்கமான நாட்களில் கட்டண தரிசனத்திற்கு ரூ.20 வசூலிக்கப்படும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து, கோயில் நிர்வாகம் கட்டண தரிசன டிக்கெட் விலையை உயர்த்தி ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதனால், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சாதாரண நாட்களில் கூட தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். ஆனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டும் முறையாக மேற்கொள்ளவில்லை என வேதனை தெரிவித்தனர்.

Related Stories: