மத்திய அரசை கண்டித்து ஜன.8ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: கோவையில் ஏஐடியுசி பொதுசெயலாளர் பேட்டி

கோவை:‘‘மத்திய அரசை கண்டித்து ஜனவரி 8ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது’’ என ஏஐடியுசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் தெரிவித்தார். ஏஐடியுசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  ஏஐடியுசியின் 100-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, கோவையிலும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி மாதம் 8ம் தேதி மத்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் பொது வேலை  நிறுத்தம் நடத்த உள்ளது. அதில் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன.  மத்தியில் ஆளும் மோடி அரசு பொருளாதார விரோத நடவடிக்கையில் முழுமையாக இறங்கி உள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களில் வலுக்கட்டாயமாக திருத்தம் செய்து அதை தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பியுள்ளது. அதனால்  ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

தொழிலாளர்கள் குறித்த சட்டபிரிவுகளை குறைப்பது மட்டுமல்லாது, 150 வருடங்களுக்கு மேலாக  தொழிலாளர்கள் நல அமைப்புகள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது. 1920ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்  போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை சீர்குலைக்கும் அரசின் நடவடிக்கைக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மட்டும் 5 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளது. குறிப்பாக கோவையில் அதன் பாதிப்பு  அதிகமாக உள்ளது. அதே சமயத்தில் வலுக்கட்டாயமாக பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நடவடிக்கையால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ரயில்வே, ஏர்போர்ட்  போன்ற நிறுவனங்களை கட்டாயப்படுத்தி தனியாருக்கு விற்றும், விற்கவும் அரசு முயல்கிறது. இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக பொதுத்துறை நிறுவனங்கள் இருந்துள்ளன. இக்கட்டான கால கட்டத்தில் பொதுத்துறைகளின் பங்கு  இந்தியாவிற்கு மிக்க உதவியாக இருந்துள்ளது. ஆனால் பொதுத்துறைகளின் மீது மத்திய அரசு மிகப்பெரிய போரை தொடுத்து வருகிறது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அமர்ஜித் கவுர் கூறினார்.

Related Stories: