சரியான சிகிச்சை இல்லை அரசு டாக்டரை சிறை வைத்து சுகாதார நிலையத்துக்கு பூட்டு: போதை வாலிபருக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு: மூதாட்டிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லையென கூறி டாக்டர், செவிலியர்களை ஒரத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறை வைத்து பூட்டு போட்டு பூட்டிய போதை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வேலியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் முத்துக்குமார் (30). இவர் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் போதையில்  இருந்ததாக கூறப்படுகிறது. உள்ளே சென்ற அவர், அங்கு பணியில் இருந்த டாக்டர் ராஜதுரையை தரக்குறைவாக திட்டினார்.

மேலும் டாக்டர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை உள்ளே வைத்து மருத்துவமனை மெயின் கேட்டுக்கு பூட்டு போட்டு சிறை வைத்தார். அப்போது அங்குள்ளவர்கள் அவரிடம் கேட்டபோது தனது பாட்டிக்கு இங்கு சரியாக சிகிச்சை  அளிக்கவில்லை. இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்று முத்துக்குமார் கூறியுள்ளார்.  சுகாதார நிலையம் பூட்டப்பட்டதால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒரு மணி நேரத்திற்கு பின், நோயாளிகளே  முத்துக்குமாரிடம் சாவியை வாங்கி திறந்து விட்டனர். இதுகுறித்து வாட்டத்திகோட்டை போலீசில் டாக்டர் ராஜதுரை புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முத்து குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: