ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் அடுத்தவர்கள் மீது பழிசுமத்தி கட்சி தொடங்க கூடாது: அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: ஜனநாயக நாட்டில்  யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும், அடுத்தவன் மீது பழிசுமத்தி  கட்சி தொடங்க கூடாது என்று பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: சிலர் கட்சி தொடங்குவேன் என்று சொல்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அடுத்தவன் மீது பழிசுமத்தி கட்சி தொடங்கவேண்டாம். அது தவறு. யார் கட்சி தொடங்கினாலும் நமக்கு  கவலையில்லை. ஏனென்றால் நமது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நமது இயக்கம் உயிரோட்டமான இயக்கம்.  துரோகிகளை அழிப்பது தனது நோக்கம், என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.  உண்மையிலேயே  யார் துரோகி?.  மக்களுக்கு தெரியும். அவரும், அவரது குடும்பமும் இந்த கட்சியை எப்படி பாடாய்படுத்தினார்கள். இந்த கட்சியை வீழ்த்துவேன் என்று கூறிவரும் டி.டி.வி.தினகரன் தான் துரோகி. கடலில் விழுந்த உப்பை போல அமமுக கரைந்து  கொண்டிருக்கிறது. முழுவதுமாக கரைந்து போகும்போது அவர் நடுவீதியில் நிற்பார். இந்த ஆட்சியை கவிழ்க்க 18 எம்எல்ஏக்கள் அவருடன் சென்றனர். இப்போது அவர்கள் அனைவரும் நடுவீதியில் நின்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.  

 உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். ஒற்றுமையாக இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வெற்றியை பெற வேண்டுமென்றால், இந்த உள்ளாட்சி தேர்தலில் நமது பலத்தை  நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘‘ஏதோ இங்கே வெற்றிடம் இருக்கின்றது என்று சிலர் கூறுகிறார்கள். இங்கே வெற்றி இருக்கிறதே தவிர, எந்த வெற்றிடமும் இல்லை.  நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த நாம், உள்ளாட்சியிலும் நிச்சய வெற்றி பெற்றிட வேண்டும். கட்சி தலைமை தங்கள் விருப்பத்திற்கு முடிவெடுத்து, கட்டளையிட்டு விடாது. நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து, முடிவெடுப்போம். அந்த முடிவு,  தமிழக மக்களின் நலனுக்காகவே இருக்கும். வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல், லட்சத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு, பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தர காத்திருக்கிறது’’ என்றார்.

Related Stories: