நகர்ப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 9.3 சதவீதம்

புதுடெல்லி: நகர்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பலர் வேலை இழந்துள்ளனர். பணப்புழக்கம் குறைவு, தொழில் விஸ்தரிப்பு இல்லாததால் வேலை வாய்ப்புகளும் ஏற்படவில்லை.  இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வேலையில்லா திண்டாட்டம்  குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், நகர்ப்புறங்களில் எடுக்கப்பட்ட சர்வேயி்ன்படி ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலையில்லா திண்டாட்டம் 9.3 சதவீதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.  இதில் வேலையில்லாத திண்டாட்டம் ஆண்களிடையே 8.7 சதவீதமாகவும், பெண்களிடையே  11.6 சதவீதமாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

 இதற்கு முன்பு, கடந்த மே மாதம் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான புள்ளி விவரம் வெளியானது. அதில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் எனவும், இது 45 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவு என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஒப்பிடுகையில், தற்போது வேலையில்லா திண்டாட்டம் 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.  ஏற்கெனவே, ஐடி துறை, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. புதிய வேலை உருவாகவில்லை. மாறாக, இருப்பவர்களின் வேலை பறிபோகும் நிலை உள்ளது. எனவே, பொருளாதார நிலை விரைவில் மீட்கப்படாவிட்டால், தொழில்துறைகளில் வேலையிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

Related Stories: