மஞ்சூர் அருகே அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின

மஞ்சூர் : தொட்டகம்பை கிராமத்தில் அட்டகாசம் செய்த 30 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மஞ்சூர் அருகே உள்ள தொட்டகம்பையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைகிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. விளைநிலங்களில் புகுந்து செடிகளை பிடுங்கி பெரும் நாசம் செய்து வருவதுடன் குடியிருப்புகளில் நுழைந்து திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து குந்தா வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதற்காக தொட்டகம்பை பகுதியில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டது.  

இந்த கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒவ்வொன்றாக கூண்டுக்குள் சிக்கின. இதில் மொத்தம் 30 குரங்குகள் கூண்டில் சிக்கியதை அடுத்து அவற்றை தனியார் வாகனம் மூலம் வனத்துறையினர் தொலைதூரமுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

Related Stories: