நாட்டிலேயே தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று திமுக எம். பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் பதில் அளித்துள்ளார். தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது, நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 37.7 பால் என்பது பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக இல்லையா என்றும் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதா என்று திமுக எம். பி. டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கேள்விக்கு எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த அஷ்வினி குமார் சவுபே, நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 6,432  மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த 6,432 மாதிரிகளில் 338ல் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 5.7% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மொத்தம் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88ல் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதே போல டெல்லியில் சேகரிக்கப்பட்ட மொத்தம் 262 மாதிரிகளில் 38ல் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது.  கேரளா பொறுத்தவரை மொத்தம் எடுக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகள் நச்சுத்தன்மை அதிகம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை இருப்பது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் அது அளவை மீறுகின்றபோது மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒன்று தான். மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிக்கையால் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: