பராமரிப்பு பணிக்கு பின் பயன்பாட்டிற்கு வந்தது பழநி கோயில் ரோப்கார்

பழநி: பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பழநி கோயில் ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக தெற்கு கிரிவீதியில் இருந்து வின்ச், மேற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. ரோப்காரின் பயணநேரம் 3 நிமிடம். ஜிக்பேக் முறையில் இயக்கப்படுகிறது. ஒரு மணிநேரத்தில் சுமார் 400 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்கார் மாதத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 15ம் தேதி பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. அப்போது ரோப்காரின் கீழ்தளத்தில் உள்ள டிரைவ் சக்கரத்தில் புதிய விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய இயந்திரம் பொருத்துவதற்காக நேற்று வரைரோப்கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்குப் பின் நேற்று ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கிய நிலையில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டிருந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர். தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: