நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 3 தந்தையர் மற்றும் தாயின் காவலை டிசம்பர் 5 வரை நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 தந்தையர் மற்றும் தாயன் காவலை டிசம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத்தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர்களான பிரவீன் (21), ராகுல் (20), இவர்களது தந்தையர் சரவணன் (44), டேவிஸ் (47), மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதி மற்றும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் தந்தையர் உள்ளிட்ட 4 பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, 4 பேரையும் டிசம்பர் 5 வரை சிறையில் அடைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதான மாணவியும், 4 மாணவர்களும் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவியின் தாயார் மைனாவதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஜாமின் வழங்க வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆள்மாறாட்டம் செய்ததன் முழு விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக்கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: