மாமல்லபுரத்தில் இந்திய கலாச்சார விழா நடத்த ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

காஞ்சிபுரம்: டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மாமல்லபுரத்தில் இந்திய கலாச்சார விழா நடத்த ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஷி. ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடைய முறைசாரா சந்திப்பானது மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அச்சமயம் மாமல்லபுரத்தில் பல்வேறு இந்திய கலாச்சாரங்களை வெளிப்படுத்த கூடிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழக பாரம்பரிய நடனங்கள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. இதனை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் கண்டு களித்தனர். இதன் மூலமாக தமிழக அரசின் கலாச்சாரமானது உலகளவில் எடுத்து செல்லப்பட்டதாக விழாவில் உரையாற்றிய நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது, வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் இந்திய கலாச்சார விழா முழுவதுமாகவே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் இந்திய கலாச்சார நடன விழா நடத்துவதற்கு தமிழக அரசானது நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை பொறுத்தவரையில் மாநில அரசின் பங்காக 50 லட்சமும், மத்திய அரசின் பங்காக 25 லட்சம் என மொத்தமாக 75 லட்சமானது நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாச்சார நடன நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தலைவர்களுடைய சந்திப்பின் காரணமாக மாமல்லபுரமானது அதிகளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகின்ற காரணத்தால் அதனை மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியில் இந்த நிகழ்ச்சியானது மாமல்லபுரத்தில் நடத்த தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories: