டெல்லியில் பிரதமர் மோடி-சரத் பவார் சந்திப்பு: மகாராஷ்ராவில் பாஜக ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவா?

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்  தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்:

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை   விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.

இதையடுத்து சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி   விதித்த நிபந்தனையால், அந்தக் கட்சியின் சார்பில் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான விரிசல் அதிகமானது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து அதன்படி நடக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர்   சோனியா காந்தியை நேற்று முன்தினம் சரத் பவார் சந்தித்தார்.

சரத் பவார் பேட்டி:

இது தொடர்பாக சரத் பவார் நிருபர்களிடம் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? தெரிந்துதான் கேட்கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு நிருபர்கள்   என்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம்.

அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம் என்று தெரிவித்தார். சோனியா காந்தியிடம் மகாராஷ்ரா அரசியல் பற்றி பேசவில்லை என்றார். சிவசேனா-என்சிபியுடன் இணைந்து  ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே என்று கேட்டனர். அதற்கு சரத்  பவார் மிகவும் கிண்டலாக அப்படியா எனக் கேட்டவாறு நகர்ந்து சென்றார்.

பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு:

இதற்கிடையே, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் ஆட்சியமைப்பது  குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்திய சூழ்நிலையில், பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரலாம் என்றும் சரத் பவாரை குடியரசு தலைவராக்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் தகவல்கள்  வெளியாகின. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்தது மகாராஷ்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

Related Stories: