விடிய, விடிய கனமழை: குன்னூர் சாலையில் மண் சரிவு... போக்குவரத்து மாற்றம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழையால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கோத்தகிரி வழியாக மாற்றப்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. குன்னூர் பகுதியில் மட்டும் 139 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவு குன்னூர் - மேட்டுப்பாளையம் ‌சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தது. காட்டேரி பகுதியில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில்  போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. கோத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓடையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோ, 1 சரக்கு வேன், 2 பைக் உள்ளிட்ட 6 வாகனங்கள் ஓடையில் அடித்து செல்லப்பட்டன. ஓடையில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால் வாகனங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குன்னூர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மட்டுமல்லாமல், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி சாலையின் சில பகுதிகளிலும் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்டு வரும் மண் சரிவால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குன்னூரில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

Related Stories: