இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் புதுப்புது டிசைன்களில் ‘அபூர்வா’ பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி மும்முரம்: பொங்கலை முன்னிட்டு ஏராளமான ரகங்கள் குவிப்பு

இளம்பிள்ளை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் அபூர்வா பட்டு மற்றும் காட்டன் சேலைகள் உற்பத்தி சுறு சுறுப்படைந்துள்ளது. இவை உடனுக்குடன் விற்பனைக்கு  அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிகளில் ஏற்றுமதி  ரகங்களான காட்டன் ஜவுளிகள், அபூர்வா சேலை, சில்க் காட்டன், காட்டன் சேலை, டவல், கேரளா சேலை, வேஷ்டி, லுங்கி, காடா உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரகங்களும்  இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதமே இருக்கும் பட்சத்தில், சேலத்தை அடுத்துள்ள இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் அபூர்வா மற்றும் சில்க் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. இவ்வாறு உற்பத்தி  செய்யப்பட்ட சேலைகளை, உற்பத்தியாளர்கள் அவ்வப்போது விற்பனைக்காக தமிழகம் முழுவதுமுள்ள கடைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து இளம்பிள்ளையை சேர்ந்த சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே அபூர்வா பட்டுச்சேலைக்கு இளம்பிள்ளை தான் பிரசித்தி பெற்ற இடமாகும். இளம்பிள்ளையை சுற்றியுள்ள இடங்கணசாலை, வேம்படிதாளம்,  அரியானூர், சீரகாபாடி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், ஓமலூர், எட்டிக்குட்டைமேடு உள்பட பல பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இங்கு விசைத்தறிகளில் நதியா செக்டு, சாமுத்ரிகா எம்போஸ், நயன்தாரா விஸ்வாசம், ரேவதி பைப்பிங், அபூர்வா சில்க் காட்டன், லினைன் சில்க் காட்டன், கரிஷ்மா பட்டு, கல்யாணி பட்டு, கல்யாணி காட்டன் உள்பட பல்வேறு ரகங்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதை தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு அதிகளவில் செல்கின்றன. மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர்,  மலேசியா, துபாய் உள்பட தமிழர்கள் வசிக்கும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இளம்பிள்ளையில் ஆண்டு முழுவதும் அபூர்வா பட்டுச்சேலை, காட்டன் சேலைகள் உற்பத்தி இருந்து கொண்டே இருக்கும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதமே இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அபூர்வா சேலைகளின் விற்பனை களைகட்டும். இதனால்  பொங்கல் விற்பனைக்காக சேலை உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம். கரிஷ்மா பட்டு, சில்க் காட்டன் போன்றவை அதிகளவில், பெண்கள் விரும்பி அணியும் ரகமாக இருக்கிறது.  குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி  மாணவிகள் சில்க் காட்டன் சேலையை அதிகளவில் விரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உற்பத்தி செய்யப்பட்ட சேலையை உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். ஒரு சேலை ரூ.300 முதல் ரூ.1500 வரை விற்பனை  செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

முகூர்த்த சேலை விற்பனை அதிகரிப்பு:

வசதி படைத்தோர் முகூர்த்தங்களில் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை முகூர்த்த பட்டுச்சேலை எடுக்கின்றனர். வசதி குறைவானவர்கள் இளம்பிள்ளை அபூர்வா சேலை வாங்கி முகூர்த்தங்களில் பயன்படுத்துகின்றனர். கடந்த  பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான திருமண கோஷ்டியினர் அசல் பட்டுச்சேலைதான் வாங்குவார்கள். தற்போது அபூர்வா சேலை வாங்குவோரின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அபூர்வா ரக  சேலைகளின் விற்பனை கூடியுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>