அமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார்

குடியாத்தம் போலீஸ் சப்-டிவிஷன் எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் குடியாத்தம் பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் கடத்தி ஆந்திரா மற்றும் குடியாத்தம் பகுதிக்கு விற்பனை  செய்யப்படுகிறது. இதற்கு எம்எல்ஏ, அதிமுக ஒன்றிய செயலாளர் மூலம் குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு போலீசார் என தனித்தனியாக பணம் பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும்  வேலூர் எஸ்பியால் நியமிக்கப்பட்ட மணல் கடத்தல் தனிப்பிரிவு போலீசார் குடியாத்தம் வரும் போது, உள்ளூர் போலீசார் அதுபற்றி எம்எல்ஏ மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர்.

அவர்கள் மூலம் லாரி  உரிமையாளர்களுக்கும் உடனடியாக தகவல் சென்றடைந்து விடுகிறது. அன்று ஒரு நாள் மணல் கடத்தல் நிறுத்தப்படுகிறது. மேலும் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட அமைச்சர் கட்டிவரும்  கல்லூரிக்கு குடியாத்தத்தில் இருந்து நாள்தோறும் மணல் சப்ளை செய்யப்படுகிறது. அமைச்சர் கல்லூரிக்கு செல்வதால் போலீசார் இந்த மணல் கடத்தலை தடுக்க அஞ்சுகிறார்கள். வேறு யார் என்றாலும் மாமூல் வசூலிக்கும் தாங்கள் இதற்காக  மாமூலும் கேட்க முடியவில்லை என்ற போலீசாரின் புலம்பலை அமைச்சர் கண்டுகொள்ளவில்லையாம்.

‘மது, மாது’வில் குளித்த அதிகாரி...!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் ஒரு பஞ்சாபி ஓட்டல் உள்ளது. இங்கு, 24 மணி நேரமும் கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறு சிறு கடைக்காரர்களிடம் தங்களது வீரத்தை  காட்டும் பல போலீசார், இந்த பஞ்சாபி ஓட்டல் உரிமையாளரிடம் சரண்டராகி விடுகின்றனர். இந்நிலையில், பவானி சப்-டிவிசனை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, தன்னை கொஞ்சம் ‘கவனி’’ க்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளரிடம்  கூறியுள்ளார். உடனே அவர், பவானி மலைப்பகுதியில் ஒரு காட்டேஜ் புக்கிங் செய்து, மது, மாது என எல்லாவற்றையும் சப்ளை செய்து குஷிப்படுத்திவிட்டார். இதில், உற்சாகமான அந்த அதிகாரி, ‘‘ஐயா, நீங்கதான் கடவுள்..’’ என புகழ்ந்து  தள்ளிவிட்டார். அத்துடன், இன்று முதல் உங்கள் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுவிட்டார். அதன்படி, போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. கள்ள மது விற்பனை முன்பைவிட படுவேகமாக  நடக்குது...!

தீபாவளி சோகத்திலிருந்து  மீளாத மாங்கனி காக்கிகள்

மாங்கனி மாநகரில் கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார், தீபாவளி சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவியாய் தவிக்கிறாங்களாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள், ஸ்டேஷன் அதிகாரியான  இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனில் பணிபுரியும் கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்எஸ்ஐ என 60 பேருக்கும் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் கொடுத்து உற்சாகமாக வாழ்த்து சொல்வாராம். ஆனா, இந்த தீபாவளிக்கு ஸ்டேஷன் அதிகாரி, யாரையும்  கண்டுகொள்ளவில்லையாம். உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ஸ்வீட், பட்டாசு பாக்ஸ்களை அனுப்பிவிட்டு, அமைதியாக இருந்துகொண்டாராம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஆளுக்கு தலா 10 பாக்ஸ் பட்டாசு, ஸ்வீட், டிரஸ் என அதிகாரி கொடுத்து  அமர்க்களப்படுத்திய நிலையில், இந்த தீபாவளிக்கு இப்படி ஆகி போச்சேனு ஒரே புலம்பலில் இருக்காங்களாம் ஸ்டேஷன் காக்கிகள். இனிமேல் தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு தீபாவளியை பார்த்திட கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டும்  இருக்காங்களாம் காக்கிகள்.

Related Stories:

>