ஜிஎஸ்டியுடன் பில்போட்டு அசத்தல் தமிழக இலவச சேலைகள் ஆந்திராவில் விற்பனை

வேலூர்: ஆந்திர மாநில ஷோரூம்களில் தமிழக அரசின் இலவச சேலைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பண்டிகையின்போது இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. ஆனால் இந்த சேலைகள் பெரும்பாலான பயனாளிகளை சென்றடையாமல் பதுக்கி வைக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி நகர பிரபல துணிக்கடையில் தமிழக அரசின் இலவச சேலைகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க  தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும்  கண்துடைப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இலவச  சேலைகளும் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு சென்று பிரபல  ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சேலைகளின் விலை 146 என்று குறிப்பிடப்பட்டு ₹38 தள்ளுபடி  வழங்கி 2.57 ஜிஎஸ்டியுடன் 108க்கு படுஜோராக விற்கப்படுகிறது.

தமிழக அரசின் திட்டங்கள் பலவற்றில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஏழைகளுக்கு அளிக்கும் இலவச வேட்டி சேலை திட்டத்திலும் ஊழல் நடைபெற்று உள்ளது. இதன் மூலம் ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கப்படவில்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதுகுறித்து தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ரேஷன் அரிசியிலும் கொள்ளை லாபம்: ஏற்கனவே தமிழகத்தில் ரேஷன் கடைகளில்  வழங்கப்படும் இலவச அரிசி பல்வேறு விதங்களில் மூட்டை, மூட்டையாக வாகனங்களிலும், ரயில்களிலும் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. அங்கு அவை பாலிஷ் செய்யப்பட்டு தரமான அரிசி என்ற பெயரில் மீண்டும் தமிழகத்துக்கே  கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் கடத்தல்காரர்கள்  கொள்ளை லாபம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>