புதியதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பும் இல்லை : அமைச்சர் வேலுமணி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் வேலுமணி  கூறியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும், இப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி 5 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப்போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.  எதிர்க்கட்சி தலைவர் அரசை குறைசொல்லும் நோக்கில் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது, அப்பகுதியில் வாழும் மக்களின் நெடுநாளைய கோரிக்கை. அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். 2020ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருப்பதால், 31-12-2019க்கு பின்னர் எந்த ஒரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ அல்லது அதை குறைக்கவோ இயலாது. எனவேதான், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழக அரசு விரைவாக முடித்து அதை நடைமுறைபடுத்தியுள்ளது.

புதிய மாவட்டங்களை தோற்றுவித்தும், அவற்றின் எல்லைகளை வரையறுத்தும் வெளியிடப்பட்ட அரசாணைகளில் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு பணி முடிவுற்றுள்ளதாலும், உச்ச நீதிமன்றம் 17.7.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவின்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும், தற்போது மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டாலும், இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்தவித குழப்பமும் இல்லை. தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்படின், உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 2018ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: