ஹாங்காங்கில் 5 மாதங்களாக தொடரும் போராட்டம்: போராட்ட களத்தில் முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா

ஹாங்காங்: ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தன்னாட்சி பகுதியாக இருந்து வருகிறது. ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போது, சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் சூறையாடி வருகின்றனர். மேலும், ஹாங்காங் சாலைகளில் தடுப்புகளை அமைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹாங்காங் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சீன ராணுவத்தின் ஹாங்காங் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹாங்காங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல்முறையாக சீன ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: