சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள்..: பம்பையில் போலீசார் தடுத்து நிறுத்தம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மண்டல மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை, திறக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை ஆரம்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வி்ல் நிலுவையில் இருக்கும் காரணத்தால், சபரிமலைக்கு வரக்கூடிய இளம்வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள மாநில அரசு கைவிரித்துவிட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான, சுஜாதா உட்பட 10 இளம்பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

அவர்கள் நிலக்கல் பகுதியை தாண்டி பம்பை வரை வந்துவிட்டனர். இதன்பிறகு காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டைகளை வாங்கி சோதித்து பார்த்தபோது 10ல் 7 பேர் சுமார் 40 முதல் 45 வயதுக்கு உள்ளே இருப்பது தெரியவந்தது. சபரிமலை மரபுப்படி 10 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளும், 50 வயதுக்கு மேலே உள்ள மூதாட்டிகள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும். எனவே பாதுகாப்பு கருதி, அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் பம்பை பகுதியில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முன்னதாக, 10 முதல் 50 வரை வயது பெண்கள் கோவிலுக்கு வந்தால், பாதுகாப்பு அளிக்கப்படாது என்று கேரள அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: