மூக்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கிராம சேவை மையத்தில் இயங்கும் அவலம்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பள்ளிக்கட்டிடம் சேதமடைந்ததால், கிராம சேவை மையத்தில் பள்ளி இயங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறந்தாங்கியை அடுத்த மூக்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 1 முதல் 5 வரை பழமையான ஓட்டுக் கட்டிடத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை கான்கிரீட் கட்டிடத்திலும் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்த 2 பள்ளிக்கட்டிடங்களுமே சேதமடைந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் பள்ளிகளின் கூரைகளில் இருந்து பள்ளி அறைக்குள் தண்ணீர் ஒழுகியது.

இதனால் பள்ளி இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளி கட்டிடங்கள் தொடர்ந்து வலுவிழந்துள்ளதால், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  உள்ளாட்சித்துறையின் மூக்குடி ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கிராம சேவை மையத்தில் வைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.  எனவே பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் சேதமடைந்துள்ள மூக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்களை கட்டித்தர வேண்டும்.

Related Stories: