கும்பகோணத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம்  கும்பகோணத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பை சுத்தம் செய்யும் பணியின் போது துப்புரவு தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்தார். கும்பகோணம் மேலேகாவிரியை சேர்ந்த சாதிக் பாஷா உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே பாதாள சாக்கடையை கழிவுநீர் வாகனகுழாய் உதவியுடன் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் கம்ப்ரசர் குழாய் மூலம் அடைப்பை எடுக்க முயன்ற சாதிக் பாஷா குழாயை உள்ளே செலுத்திய போது நிலை தடுமாறி பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தார். இதனை கண்டு அச்சமடைந்த சக தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர். பின்னர் பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனிடையே சாக்கடைக்குள் தலைகீழாக விழுந்து சிக்கி தவித்த சாதிக் பாஷா விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சாதிக் பாஷாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே துப்புரவு பணியாளரின் உயிரிழப்புக்கு காரணம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>