குமரி அருகே சூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த 10 மீனவர்கள் ஒரு மாதத்திற்குப் பின் ஊர் திரும்பினர்

குமரி அருகே புயலால் கரை ஒதுங்கிய 10 மீனவர்கள் ஒரு மாதத்திற்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் 13ம் தேதி கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் புயல் எச்சரிக்கை தொடர்பாக மீனவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கல்பேனி தீவில் கடந்த மாதம் 25ம் தேதி கரை ஒதுங்கினர். படகை கடலில் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தியிருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக மீனவர்களின் படகானது சூறைக்காற்றில் சிக்கி கரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் படகு பலத்த சேதம் அடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சேதமடைந்த படகுடன் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 130 கடல் மைல் தொலைவில் வந்த போது பழுதடைந்த படகு தண்ணீரில் மூழ்கியது. உயிர்தப்பி வந்த மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். படகை வாடகைக்கு அமர்த்தி வந்ததால் அவர்கள் உயிர் தப்பியதாகவும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு மூழ்கிவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். வட்டிக்கு கடன் வாங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: