அயோத்தி வழக்கின் தீர்ப்பு: தலைமை நீதிபதி ரஞ்சனை பிரதமர் மோடி பாராட்டியதாக வங்கதேசத்தில் பொய்ச்செய்தி...இந்தியா கடும் கண்டனம்

டெல்லி: அயோத்தி தீர்ப்பையும் பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி வங்கதேசத்தில் பரப்பப்பட்ட பொய்ச்செய்திக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு:

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த  2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி  அகாரா மற்றும் ராம் லாலா ஆகிய 3 தரப்பும் நிலத்தை  மூன்று பாகமாக சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த 3 தரப்பினர் உட்பட மொத்தம்  14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதலில் தலைமை நீதிபதி அமர்வில் இவை விசாரிக்கப்பட்டன. பின்னர், 5 நீதிபதிகள்  கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.  

இதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே,  டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்  பெற்றனர். இவர்கள் இந்த வழக்குகளை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் தினசரி அடிப்படையில்  விசாரணை நடத்தினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அன்றைய தினம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை  நீதிபதி கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்த வழக்கில் எந்த நேரத்திலும் அவர் தீர்ப்பு வழங்கக் கூடும் என  எதிர்பார்க்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சரியாக காலை 10.30க்கு தீர்ப்பு  வாசிக்கப்பட்டது. மொத்தம் 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு பக்கங்களின், முக்கிய அம்சங்களை மட்டுமே நீதிபதிகள் வாசித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள்  கூறியதாவது: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாங்கள் அனைவரும் ஒருமித்த உத்தரவை பிறப்பிகிறோம். அயோத்தியில் ராமர் கோயிலை  கட்ட எந்த தடையும் கிடையாது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும், அரசுக்கு சொந்தமானது என்பதை வருவாய் துறை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்த நிலத்தை  மத்திய அரசு தனது கட்டுபாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். இதில், கோயில் கட்டுவதற்கான 3 மாதங்களில் அறக்கட்டளையை மத்திய அரசு  அமைக்க வேண்டும்.

அதே நேரம், இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். அந்த  இடத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மசூதி கட்டிக் கொள்ள வேண்டும். இந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி இஸ்லாமிய அமைப்பான வக்பு  வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தியா கண்டனம்:

இதற்கிடையே, அயோத்தி தீர்ப்பையும் பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி வங்கதேசத்தில் பரப்பப்பட்ட பொய்ச்செய்திக்கு இந்தியா கண்டனம்  தெரிவித்துள்ளது. அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதாகவும், இந்து  ராஷ்டிரத்திற்கு உச்சநீதிமன்ற அமர்வின் உன்னதமான பங்களிப்புக்கு அதில் பாராட்டு தெரிவித்திருந்ததாகவும் வங்கதேச ஊடகங்களில் ஒரு செய்தி  பரவியது. இது முற்றிலும் பொய்யான செய்தி என வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பொய்ச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார்,  இந்தியாவிற்கும் பங்களாதேஷ் மக்களுக்கும் இடையிலான நட்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சி இது. சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதே,   இதுபோன்ற சக்திகளின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>