ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கருத்து: நீதிபதி பெரிய கதவைத் திறந்துள்ளார்...ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் ஒரு பெரிய கதவைத் திறந்துள்ளார் என ராகுல் காந்தி டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் கருத்து தெரிவித்துள்ளார்.  

ரஃபேல் வழக்கு:

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம்  தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில்  காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையும் தற்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராகுல் காந்தி மீது வழக்கு:

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தபோது, ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட  ஆவணங்கள், ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஏற்கக் கூடாது என மத்திய அரசு வாதிட்டது. இந்தாண்டு, ஏப்ரல் 10-ம் தேதி நடந்த  விசாரணையின்பொது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிக்கும் வகையில்,  இந்த தீர்ப்பு குறித்து, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். சோக்கிதார் எனப்படும் காவலாளி என்று கூறிக்  கொள்பவர்கள் திருடர்கள் என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துவிட்டது என கூறினார்.

அதையடுத்து, ராகுல் காந்தி மீது பாஜக-வைச் சேர்ந்த மீனாட்சி லேகி, அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். நீதிமன்றம் கூறாததை, நீதிமன்றம்  கூறியதுபோல் கருத்து தெரிவித்துள்ளது, நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடர்ந்தார். மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க  வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக, ராகுல் கூறியிருந்தார். ராகுல் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்.  அதனால் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என, மீனாட்சி லேகி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி  வைக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இதற்கிடையே, ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக முகாந்திரம் இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல்  செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதே போன்று பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கை முடித்து  வைத்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில் ராகுல் காந்தி இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை கூறினர்.

அமித்ஷா கருத்து:

ரபேல் ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு, ஆதாரமற்ற தகவல்களை பரப்பியவர்களுக்கு சரியான பதிலடி என்றும் மோடி அரசு வெளிப்படையான,  ஊழலற்ற அரசு என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கருத்து  தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி டுவிட்:

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வயநாடு எம்.பி, ராகுல் காந்தி, ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் ஒரு பெரிய கதவைத் திறந்துள்ளார். ஒரு விசாரணை இப்போது முழு  ஆர்வத்துடன் தொடங்கப்பட வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவும் (ஜேபிசி) அமைக்கப்பட வேண்டும் என்று  பதிவிட்டுள்ளார்.

Related Stories: