சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை.... உச்சநீதிமன்றம்

டெல்லி: சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இந்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவைச் சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பு என மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வாதங்கள் அனைத்தையும் முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வீல்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரில் 3 நீதிபதிகள் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் தள்ளுபடி செய்தனர். 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். 7 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கருத்து: மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. மற்ற மதங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளின் மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினருக்கும் அவர்களது மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது. கோயில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: