இந்தியாவில் மின்சார தேவை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு படிப்படியாக குறைவு: புள்ளி விவரம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் மின்சார தேவை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு படிப்படியாக குறைந்து வருவது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மின்சாரத் தேவை அக்டோபர் மாதத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாட்டின் மொத்த தொழில் உற்பத்தி வளர்ச்சியில் மின்சாரத்துறைக்கு 8 விழுக்காடு பங்களிப்பு உள்ளது. மின்சாரத்துறையின் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 3வது மாதமாக குறைந்துள்ளது. இவை பொருளாதார மந்தநிலையை எடுத்துக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மின்சாரம் விநியோகத்திற்கான தேவை சென்ற அக்டோபர் மாதத்தில் 13.2 விழுக்காடு குறைந்துள்ளது என்பது மத்திய மின்சார ஆணையத்தின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெரிய நிறுவனங்கள் நிறைந்த மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மின் தேவை அதிகமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 22.4 விழுக்காடும், குஜராத்தில் 18.8 விழுக்காடும் மின்சார தேவை குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையால் பல பெரிய நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்ததால் மின்தேவை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 சிறிய மாநிலங்களை தவிர நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் மின்சார தேவை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர பருவமழை நன்கு பெய்திருப்பதால் விவசாயத்திற்கான மின்சார பயன்பாடு குறைந்துள்ளதும் மின்சார தேவை குறைய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5.7 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியா, நடப்பாண்டிலும் பெரிய முன்னேற்றத்தைக் காணாதென்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

Related Stories: