இன்று உலக சர்க்கரை நோய் தினம் நீரிழிவு நோய் பாதிப்பில் தமிழகம் முதலிடம்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

சேலம்: இந்தியாவில் தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோயாக சர்க்கரை நோய்  (நீரிழிவு நோய்) உள்ளது. சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கான இன்சுலின்  மருந்தை கண்டுபிடித்தவர் பிரெட்ரிக் பேண்டிங். இவர் பிறந்த தினமான நவம்பர்  14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில்  சர்க்கரை நோய் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழகம், சர்க்கரை நோய் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த நோயால் பாதிப்பவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்திய அளவில் தமிழகத்தில் தான், சர்க்கரை  நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்றைய சூழலில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாக சர்க்கரை  நோயால் பாதிப்படைந்து விடுகிறார்கள். நமது உடலில் மாவுப்ெபாருட்கள், கொழுப்பு, புரதம் ஆகியவை  இருக்கின்றன. மாவு பொருளைப் பொறுத்தவரையில் உடலில் ஜீரணமான பிறகே, ரத்தத்தில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டும். இந்த செயல் நடக்க உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது  உபயோகிக்கப்படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக இருந்தாலோ ரத்தத்தில் சர்க்கரையாக  தேங்கி, நோய் ஏற்படும். பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் சுமார் 5 வருடங்களுக்கு  பின்னரே அதன் பாதிப்பு  முழுமையாக தெரிய வரும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்,  அதிகமாக தண்ணீர் தாகம், காரணமில்லாமல் எடை குறைதல், பாதங்கள் மரத்து  போதல், மங்கலான பார்வை போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள்.  ஆரம்பத்திலேயே  கவனிக்கவில்லை என்றால்  முக்கியமான உடல் உறுப்புகளும், அதன் செயல்பாடுகளும் சர்க்கரை நோயால்  பாதித்துவிடும். குறிப்பாக இதய நோய், சிறுநீரக கோளாறு, பக்கவாதம், பார்வை பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நோயை  முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சம்பந்தப்பட்டவர், வியாதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். குறிப்பாக சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து விடுபட இயற்கை உணவு, தினமும் நடைபயிற்சி ஆகியவை மிகவும் முக்கியம்.  மேலும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் ஊசி, மாத்திரைகளை சரியாக எடுத்து கொள்ள வேண்டும். நோயாளிகள் மாவு பொருள் உணவுகளை தவிர்த்து கீரைகள், காய்கறிகளை அதிகளவு எடுத்து கொள்ள வேண்டும். மேலும் 30  வயதுக்கு மேல் உள்ளவர்கள் வருடம் ஒரு முறை உடலை பரிசோதித்து கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

Related Stories: