2019-2020ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியீடு

சென்னை : 2019-2020ம் கல்வியாண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் இந்த மாறுதல் கவுன்சலிங் நடத்துவதில் பள்ளிக் கல்வித்துறை தாமதம் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் இன்னும் நடத்தவே இல்லை. இது ஆசிரியர்கள் இடையே பெரும் குறையாக உள்ளது.

இந்நிலையில், அரசு மேனிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களும், நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்களும் கடந்த 5 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்தாமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு எந்த விதிகளையும் பின்பற்றாமல் நிர்வாக மாறுதல் என்ற பெயரில், ஆசிரியர்கள் விரும்பிய இடங்களுக்கே மாறுதல் வழங்கியுள்ளனர்.

ஆனால், நடப்பு ஆண்டில் ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பள்ளிக் கல்வித்துறையின் இந்த புதிய விதியை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களில் பலர் 3 ஆண்டுக்கும் குறைவாக ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலும், நீதிமன்றத்தை அணுகியதால் அவர்கள் பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இந்த நீதிமன்ற ஆணையால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இந்த முன்னுதாரணத்தை பின்பற்றி இனிவரும் காலங்களில் நீதிமன்றம் மூலமாக ஆணை பெற்று கவுன்சலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது வெளியிடப்பட்டுள்ள மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் இந்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ள சில ஆசிரியர்கள் பெயரும் உள்ளன. அவர்கள் பணி ஓய்வு பெற உள்ள ஆண்டிலாவது தலைமை ஆசிரியர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால், கடந்த 6 மாதமாக கவுன்சலிங் நடத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு அந்த பதவி உயர்வும் பறிபோய் உள்ளது.எனவே, ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நடப்பு 2019-20ம் ஆண்டுக்கான பொது மாறுதல்களுக்கான நெறிமுறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியிடப்பட்டு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் பொதுமாறுதல் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டி வழக்குகள் தொடர்ந்து தீர்ப்பாணைகள் பெற்றுள்ளனர். அந்த ஆசிரியர்கள் சார்பாக பொது மாறுதல் விண்ணப்பங்கள் இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: