வங்கதேசத்தில் பயங்கரம் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி

தாகா: வங்கதேசத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தில் சில்ஹெட்டில் இருந்து உதயன் எக்ஸ்பிரஸ் ரயில், சிட்டகாங் சென்றுகொண்டிருந்தது. இதேபோன்று தாக்கா நோக்கி துர்னா நிஷிதா ரயில் சென்று கொண்டிருந்தது. பிரமான்பாரியா மாவட்டத்தில் உள்ள மாண்டாபாக் ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதே தண்டவாளத்தில் எதிரே மற்றொரு ரயில் வந்ததை பார்த்ததும் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், டிரைவர் சுதாரிப்பதற்குள் இரு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. சிக்னல்களை பின்பற்றாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு 3 விசாரணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: