ரோப்காரில் முன்னுரிமை சலுகை ரத்து: பழநி கோயிலில் பக்தர்கள் இனி காத்திருக்க தேவையில்லை

பழநி: பழநி கோயில் ரோப்காரில் பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க முன்னுரிமை சலுகை கிடையாதென கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்ல தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதன்முதலாக இயக்கப்பட்ட பழநி கோயிலின் ரோப்கார் பயண நேரம் 3 நிமிடம். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரோப்காரில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ரோப்கார் முக்கிய பிரமுகர்களின் பிடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. விசேஷ நாட்கள், திருவிழா காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் வரும் முக்கிய பிரமுகர்களின் வருகையின்போதும் ரோப்காரில் பக்தர்கள் பயணிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, முக்கிய பிரமுகர்கள் மலைக்கு செல்வதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பழநி கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு ரோப்காரில் முன்னுரிமை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெறிமுறை (புரோட்டாகால்) முக்கிய பிரமுகர்களை தவிர, அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்களும் மலைக்கோயிலுக்கு செல்ல இனி வின்ச் மூலமாக மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி ரோப்காரில் வரிசை முறையில் பயணம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

செக்யூரிட்டி சஸ்பெண்ட்

பழநி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி பணம் பறிக்கும் போலி கைடுகள் பழநி நகரில் ஏராளமானோர் சுற்றி திரிந்து வருகின்றனர். இவர்கள் கோயிலில் பணிபுரியும் தனியார் செக்யூரிட்டிகள் சிலரை கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களின் மூலம் விரைவு தரிசனம் செய்து வருவதாக கோயில் நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. மலைக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியில், செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் தர்மலிங்கம், பக்தர்கள் சிலரை அழைத்து வருவதை கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி கண்காணிப்பு காமிரா மூலம் கண்டறிந்தார். உடனடியாக செக்யூரிட்டி நிறுவன அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்டவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். அதன்பேரில் செக்யூரிட்டி நிர்வாகம், தர்மலிங்கத்தை சஸ்பெண்ட் செய்தது. மேலும், இருவரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பக்தர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories:

>