விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விவசாய நிலத்தில் பழங்கால சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விவசாயி வயலில்  வாய்க்கால் வெட்டியபோது பழங்கால சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் அடுத்து ஆலடி அருகே உள்ள பழைய பட்டினம் கிராமத்தில் அவ்வப்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி மற்றும் பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் தொல்லியல் துறையினர் முகாமிட்டு அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல்(75) என்ற விவசாயி தன்னுடைய வயலில் நபார்டு திட்டத்தின் கீழ் வாய்க்கால் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அணை கட்டுவதற்காக ஜேசிபி மூலம் சுமார் 4 அடி ஆழத்தில் மண் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை மற்றும் நான்கு முக்காளி, 4 பூஜை மணி, 2 சொம்பு, ஒரு பானை, 2 தாம்பூலத்தட்டு, 2 தீர்த்தக்குடம், 3 சூலம், 2 தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. இதனைப் பார்த்த அப்துல் ஜலீல் மற்றும் விவசாயிகள் விருதாச்சலம் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் கிடைத்த பழங்கால சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களை பார்வையிட்ட தாசில்தார் கவியரசு, இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களாக இருக்கலாம் என கணித்தனர். . இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இது எந்த காலத்தைச் சேர்ந்தது என கண்டறிந்தால் தான் குறிப்பிட்டு கூற முடியும் எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, விவசாய நிலத்தில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து முடித்த பிறகு தங்களிடமே ஒப்படைத்தால் தங்கள் கோவிலில் வைத்து வழிபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதற்கு வருவாய்த்துறையினர் தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இப்பகுதியில் தொடர்ந்து இது போன்ற பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதால் கீழடியில் ஆய்வு மேற்கொள்வது போல  இப்பகுதியிலும்  அகழ்வாராட்சி நடத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories:

>