மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்: சோனியா இல்லத்தில் காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை..எம்எல்ஏக்கள் ராஜஸ்தானில் தங்கவைப்பு!

புதுடெல்லி: மகாராஷ்டிரா அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வரும் நிலையில், டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு கூடியுள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக புதிய அரசு அமையவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்ள சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் பா.ஜ உடன்பட மறுத்து விட்டது.

இந்த மோதலை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதல்வராக செயல்படுமாறு அவரை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், தற்போதைய 13வது  மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுள் காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக தலைவர்களோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து 2வது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் என்பது தேசியவாத காங்கிரஸின் நிபந்தனை. சிவசேனாவும் இதனை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது.

அதே நேரத்தில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் நிருபம், அப்படி ஒரு முடிவு எடுப்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பேரழிவு என சாடி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில் சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தானில் எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அங்கு வெற்றி பெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் அந்த மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் பியூனோ விஸ்டா ரிசார்ட்ஸில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், பிருத்விராஜ் சவான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று காலை 9 மணிக்கு வந்தனர். அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் சிவசேனாவை ஆதரிப்பது குறித்து விவாதித்தனர். அப்போது பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சிவசேனா ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பதற்கு பதிலாக ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென்று கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Related Stories: