குருநானக்கின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு கர்தார்பூர் யாத்திரை வழித்தடம் திறப்பு: ஐ.நா பொது செயலாளர் வரவேற்பு

வாஷிங்டன்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும்  கர்தார்பூர் வழித்தட பணியை இந்தியா-பாகிஸ்தான் கடந்தாண்டு நவம்பரில் தொடங்கியது. இதற்கான பணிகள் முடிவடைந்து, வரும் 12ம் தேதி குருநானக்கின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கர்தார்பூர் யாத்திரை  வழித்தடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. முதல்  கட்டமாக நேற்று 500 யாத்திரீகர்கள் சென்ற பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த யாத்திரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர்களான அகல் தக்த் ஜாதேதார் ஹர்பிரீத் சிங், சுக்பீர் சிங் பாதல்,  ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றுள்ளனர். மேலும், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உறுப்பினர்கள், பஞ்சாப் மாநிலத்தின் 117 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் செல்லும் பேருந்துகளை  கர்தார்பூரில் இம்ரான் கான் வரவேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,000 இந்திய யாத்திரீகர்கள் கர்தார்பூர் வருவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சீக்கியர்கள் புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை முறைப்படி திறக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர்  டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தின்போது எல்லை தாண்டி  கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: