மக்களவை தேர்தலையொட்டி நிறுத்தி வைக்கப்பட்ட நன்னடத்தை கைதிகள் விடுதலை எப்போது? கைதிகளின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பு

வேலூர்: தமிழக சிறைகளில் நன்னடத்தை கைதிகளாக பட்டியலிடப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள கைதிகளின் உறவினர்கள் அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், 60 வயது கடந்த ஆயுள் தண்டனை பெற்று 5 ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  

அதன்படி, 1,500 கைதிகள் வரை விடுதலை செய்யலாம் என்று சிறைத்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. இதுவரை சுமார் 1100க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறைகளில் 350க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், நன்னடத்தை கைதிகள் விடுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து மே 25ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது.

ஆனால் இதுவரை நன்னடத்தை கைதிகள் விடுதலை குறித்து எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகளின் விடுதலையை அவர்களது குடும்பத்தினர் எதிர்நோக்கியுள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பால், கைதிகள் விடுதலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டும், கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசியிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானதும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்றனர்.

Related Stories: